Skip to Content

விகடன் 1000

விகடன் 1000
‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்னும் தாயுமானவரின் வரிகளையே தனது கொள்கை முழக்கமாகக் கொண்டு, அரசாங்கம், அதிகார அமைப்புகள், ஆன்மிகம், இலக்கியம், ஓவியம், இசை, நடனம், திரைப்படம், சின்னத்திரை என சமூகத்தின் அத்தனை அம்சங்களிலும் அந்தந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 92 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்கூறு நல்லுலகுக்குச் சுவையான தகவல் விருந்து அளித்துவருகிறான் விகடன். 2000-வது ஆண்டு வரை ஆனந்த விகடன் அளித்திருந்த அந்த மெகா விருந்திலிருந்து ‘ஒரு சோறு பதமாக’ சில முக்கியமான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, ‘பொக்கிஷம்’ என்னும் தலைப்பில் தொகுத்து வெளியிட்டிருந்தோம். அது வாசகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று, பல பதிப்புகள் கண்டது. இதோ, கண் மூடிக் கண் திறப்பதற்குள் மேலும் 18 ஆண்டுகள் ஓடிவிட்டன. தாய்ப் பத்திரிகையான ஆனந்த விகடன் தவிர, ஜூனியர் விகடன், அவள் விகடன், சக்தி விகடன், சுட்டி விகடன், நாணயம் விகடன், பசுமை விகடன், மோட்டார் விகடன், டாக்டர் விகடன், விகடன் தடம் என, பல்வேறு ரசனைகள் கொண்ட வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் பிரத்யேக பத்திரிகைகளை வெளியிட்டுவருகிறது விகடன் குழுமம். ஆனந்த விகடன் உள்ளிட்ட விகடன் குழுமப் பத்திரிகைகள் அனைத்திலிருந்தும் அற்புதமான கட்டுரைகளைத் தொகுத்து வாசகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ததில், ஆயிரம் பக்கங்கள் கொண்ட மெகா புத்தகமாக கன கம்பீரமாக மலர்ந்துவிட்டது. ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டிருக்கும் விகடன் நிறுவனம் வெளியிட்ட முதல் புத்தகம் என்ன? தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறதல்லவா? இதில் அது பற்றிய விரிவான கட்டுரை உண்டு. ஆனந்த விகடன் பத்திரிகையை பூதூர் வைத்தியநாதையரிடமிருந்து எஸ்.எஸ்.வாசன் ரூ.200 விலை கொடுத்து வாங்கினார் என்று நம்மில் சிலர் அறிந்திருப்போம். அந்த பூதூர் வைத்தியநாதையரைப் பற்றிய மேல் விவரங்கள் தெரியுமா? அவரைப் பற்றிய கட்டுரையும் இதில் இடம்பெற்றுள்ளது. விகடனாரின் கொம்பு ரொம்பவே பிரசித்தம். ஆனால், விகடனாருக்குக் கொம்பு முளைத்த கதை தெரியுமா? அதுவும் இதில் உண்டு. விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனின் மாண்பு குறித்து சீனியர் வாசகர்கள் அறிவார்கள். ஆனால், அவர் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த மனம் திறந்த, நீண்ட பேட்டியை எத்தனை பேர் படித்திருப்பார்கள்? அதையும் இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளோம். இப்படி இந்தப் புத்தகத்தில், நவரசங்களும் கொண்ட கட்டுரைகள் ஏராளம் உள்ளன. ஒவ்வொன்றையும் ஆற அமர நிதானமாகப் படியுங்கள்; ரசியுங்கள். உங்கள் நூலகத்தில் இந்த ‘விகடன்-1000’ புத்தகம் ஒரு கம்பீரமான சிம்மாசனத்தில் அமரட்டும். ஆனந்த விகடனின் வாசகர்களாகிய நீங்களே எங்களின் உரமும் வரமும். இந்தப் புத்தகம் உங்களுக்கே சமர்ப்பணம்.

₹ 1,000.00 ₹ 1,000.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days