நான் கண்ட இந்தியா
இந்திய வரலாற்றின் மிகவும் கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தை ரத்தமும் சதையுமாக நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது இந்நூல். இந்தியா குறித்து இதுவரை எழுதப்பட்டுள்ள பயணப் பதிவுகளில் வரலாற்று ரீதியிலும் சமூகவியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இதனை அழைக்க முடியும். புகழ்பெற்ற துருக்கியப் பெண் எழுத்தாளரான ஹாலித் எடிப் 1935 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து, இரண்டாண்டுகள் தங்கி, பல இடங்களுக்குப் பயணம் செய்து, பலரைச் சந்தித்து உரையாடி தனது அனுபவங்களையும் தனித்துவமான பார்வைகளையும் இந்நூலில் அழகாகத் தொகுத்திருக்கிறார். மகாத்மா காந்தியை முதல்முறையாகச் சந்தித்த தருணம்; காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பரவசமூட்டும் அனுபவம்; நேரு, சரோஜினி நாயுடு உள்ளிட்ட ஆளுமைகளுடனான சந்திப்பு; கான் அப்துல் காஃபர் கான் குறித்த உயிரோட்டமுள்ள சித்திரம்; இந்திய இஸ்லாமியர்கள் குறித்தும் அவர்களுடைய சிக்கல்கள் குறித்தும் கூர்மையான அவதானிப்பு; காலனியாதிக்கம், இரு தேசக் கொள்கை, பெரும்பான்மைவாதம், மத அரசியல், இந்தியப் பெண்களின் நிலை என்று தொடங்கி இந்நூலில் விரியும் ஒவ்வொரு பக்கமும் நம் கண்களைத் திறந்து வைக்கிறது. நம் இதயத்தை அகலப்படுத்துகிறது. வரலாறு, அரசியல், சமூகம், மதம், பண்பாடு என்று அகலமாகப் பல தளங்களில் பயணம் செய்யும் மிக முக்கியமான ஒரு வரலாற்றுப் பிரதியை அழகு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் இஸ்க்ரா.